சேலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "இந்தியா முழுவதும் பல பிரச்சனைகள் வெடித்துள்ளன. ஃபரூக் அப்துல்லா 5ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸில் இருந்தபோது இந்தியை எதிர்த்து பெரியார் போராடினார். இந்தி படிக்க வேண்டும் என்று கூறியபோது அண்ணா போராட்டம் நடத்தினார். தற்போது இந்தி எல்லா வடிவத்திலும் திணிக்கப்பட்டுவருகிறது.
எடுத்துக்காட்டாக அமைச்சரவை பெயரைக்கூட ஜல்சக்தி என்று வைத்துள்ளனர். மத்திய அரசு மும்மொழி திட்டத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்தி பிரச்னை ஒரு பக்கம் உள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டதினை செயல்படுத்துவதன் மூலமாக டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வீணாகி விடும்.
மேகதாது அணைய கட்ட மத்திய அரசு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டிவிட்டது. ஒருபுறம் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக தமிழ்நாட்டை வஞ்சிக்க மத்திய அரசு செயல்படுகிறது. அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என கூறுவதால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எல்லா வகையிலும் தமிழ்நாடு பாதிக்க நேரிடும்.
மக்கள் எதிர்த்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த மக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை என சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு செயல்படவில்லை. தமிழ்நாட்டில் பாதிப்புகளை உருவாக்கும் திட்டங்கள் குறித்து ஆளும் அதிமுக அரசு கடிதம் எழுதுவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை.