சேலம்: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்தி சேலம் அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டம் செய்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் இன்று தொடங்கியது.
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தொமுச மாவட்ட பொதுச்செயலாளருமான மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் தொடங்கிட அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஓய்வூதியப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை வழங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.
இதையும் படிங்க:லோக்கல் குத்தாக 'வாத்தி கமிங் ஒத்து' - மாஸ்டர் இரண்டாவது பாடல்