தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவித்த சேலம் மாணவி பத்திரமாக மீட்பு! - மாவட்ட நிர்வாகம்

மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 13 நாட்கள் சிக்கித் தவித்த சேலம் மாணவி, மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

Salem student rescued from Manipur violence with the help of district administration
மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவித்த சேலம் மாணவி ஊர் திரும்பினார்

By

Published : May 21, 2023, 4:03 PM IST

சேலம் மாவட்டம்: உடையாப்பட்டி சுந்தர பெருமாள் நகரைச் சேர்ந்தவர், சுந்தரபாண்டியன். இவரின் மகள் ஹர்ஷினி (19).
இவர் கர்நாடகாவில் பி.எஸ்.சி. தடயவியல் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படிக்கிறார். தனது படிப்புப் பயிற்சிக்காக மணிப்பூர் மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்று அங்குள்ள 'பங்க்கை' என்ற பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.

இந்த நிலையில் மே மாதம் மூன்றாம் தேதி மணிப்பூர் மாநிலத்தில், பழங்குடியினர் சமுதாயத்திற்கும் பழங்குடி அல்லாத மற்றொரு சமுதாயத்திற்கும் இடையே கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில், தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதனால், மாநிலம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ஸ்தம்பித்ததால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில், சேலம் மாணவி ஹர்ஷினியும் சிக்கினார்.

ஹர்ஷினி உடனடியாக, தான் பாதிக்கப்பட்ட விசயத்தை, தனது தந்தைக்கு தெரியப்படுத்தினார். தன்னை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் காப்பாற்றி, அரசு உதவி பெற்றுத் தர வேண்டுமென்று தந்தையிடம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, இம்மாதம் 4ஆம் தேதி தனது மகளை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம், ஹர்ஷினியின் தந்தை சுந்தரபாண்டியன் மனு அளித்தார்.

இதையும் படிங்க: அய்யோ சபாநாயகர் பதவி வேண்டாம்... பதறி ஓடும் காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏக்கள்.. என்ன காரணம்?

இதனைத் தொடர்ந்து அரசு செலவில் ஹர்ஷினி தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நேற்று (மே 20ஆம் தேதி) சேலம் வந்த ஹர்ஷினி, சேலம் மாவட்ட ஆட்சியரை தனது பெற்றோருடன் சந்தித்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஹர்ஷினி கூறுகையில் ," மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டதால் தங்கி இருந்த விடுதியை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை. எப்போதும் துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் மிகவும் பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது.

கலவரத்தால் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. செல்போன் அழைப்புகள், மட்டுமே தொடர்பு ஏற்படுத்தும் வசதியாக இருந்தது. கலவரத்தால் 13 நாட்கள் விடுதியின் அறைக்குள் முடங்கிக் கிடந்தேன். அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 14ஆம் நாள் இம்பால் விமான நிலையம் வந்து சேர்ந்தேன். அங்கே இருந்து சென்ற 17ஆம் தேதி சென்னை வந்தேன். பின், அங்கிருந்து சேலம் வந்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details