இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், “சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பொதுமக்களிடையே கரோனா தொற்று அறிகுறிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகரப் பகுதிகளிலுள்ள 60 கோட்டங்களிலும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் பணிபுரிவோர் விபரம், குடும்ப உறுப்பினர்களில் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக நான்கு மண்டலங்களுக்குள்பட்ட 43 கோட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 76 இடங்கள், அதன் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு விபரங்களின்படி அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அப்பகுதிகளில் நோய் தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து பரிசோதனை முடிவுக்கேற்றவாறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மாநகராட்சிக்குட்ட 4 மண்டலங்களிலும் 20 இடங்களில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சூரமங்கலம் மண்டலத்தில் கோட்டம் எண். 20இல் கபிலர் தெரு, கோட்டம் எண். 23இல் மாரியம்மன் கோயில் தெரு, கோட்டம் எண். 25இல் இராவணேஸ்வரா நகர், கோட்டம் எண். 28இல் நரசிம்மன் தெரு, அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 5இல் சக்தி நகர், கோட்டம் எண். 12இல் மணக்காடு, கோட்டம் எண். 16இல் சின்ன புதூர், முனியப்பன் கோவில் தெரு ஆகிய எட்டு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண். 10இல் அண்ணா நகர், கோட்டம் எண். 35இல் ஜோதி டாக்கிஸ் மெயின் ரோடு, கோட்டம் எண். 36இல் கிருஷ்ணன் புதூர், கோட்டம் எண். 40இல் பாரதியார் தெரு, கோட்டம் எண். 43இல் வி.ஓ.சி நகர், சுந்தரம் தெரு, கோட்டம் எண். 44இல் காளிக்கவுண்டர்காடு, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 46இல் கறி மார்க்கெட் ரோடு, கோட்டம் எண். 52இல் சுண்ணாம்புகார தெரு, கோட்டம் எண். 53இல் பந்தல் காளியம்மன் கோவில் தெரு, கோட்டம் எண். 59இல் செல்லக்குட்டி காடு, கோட்டம் எண். 60இல் பராசக்தி நகர் என 12 இடங்களில் மொத்தம் 20 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.