சேலம்:மத்திய அரசின் 'செயில் ரிப்ரேக்டரி நிறுவனம்' (Sail Refractory Company), சேலம் மாமாங்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மெக்னீசியம் எனப்படும் வெல்லைக் கல்லை வெட்டி எடுத்து, சேலம் உருக்காலைக்கு அனுப்பி வருகிறது.
இந்த செயில் ரிப்ரேக்டரி நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், ஆலையில் பணிபுரியும் போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
மாதம் 26 நாட்கள் கட்டாயம் பணி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று ஏழாவது நாளாகத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு நிறுவனம் தங்களுக்கு நேரடியாகப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக கைவிட வேண்டும், 'டன் வேஜ்' முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கி இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகத்தீர்வு எட்டவில்லை என்பதால் தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.