சேலம்: சுப்ரமணிய நகர் பகுதியில் பிரபல பிரியாணி ஹோட்டல் (ஆர்ஆர் பிரியாணி) செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு நேற்று (ஆகஸ்ட் 29) மாலை மது அருந்திய நிலையில் வந்த நபர் ஒருவர், ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும், அதனால் ஊழியர்கள் அந்த நபரை வெளியே அனுப்பியதாகவும் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில், ஹோட்டலுக்கு வந்த ஒரு கும்பல் ஹோட்டல் ஊழியர்கள் மீது சரமரியாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம், அந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பலுக்கு ஆதரவாக அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தாமோதரன் என்பவர் வந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதம் நடத்தியதாக ஹோட்டல் உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் காவல் துறையினர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தாக்குதல் நடத்தியவர்களை தற்போது தேடி வருகின்றனர். இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் விஜய வெங்கடேஸ்வரன் கூறும்போது, “சேலம் நகருக்கு உள்ளேயே இதுபோன்று ரவுடிகள் அட்டகாசம் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார். மேலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.