சேலம்:சேலம் மாவட்டத்தில் பத்திரப் பதிவாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ். இவர் மீது சமீபத்தில் அடுக்கடுக்கான மோசடி புகார்கள் குவிந்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவர் பூமொழி கூறுகையில், "சேலம் மாவட்டம் எடப்பாடியை பூர்வீகமாகக் கொண்டவர் கனகராஜ். இவர் தற்போது சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட (பொறுப்பு) பத்திரப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
கனகராஜின் கண்காணிப்பின் கீழ், சேலம் மேற்கில், 1 எண் இணை சார்பதிவாளர், சேலம் (மேற்கு) 3. எண் இணை சார்பதிவாளர், சூரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேட்டூர், மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன.
அதேப்போல், சேலம் கிழக்கு பகுதியில், 1. எண் இணை சார்பதிவாளர், சேலம் (கிழக்கு) அயோத்தியாபட்டணம், தாதகாபட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளைம், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளிலும் அலுவலகங்களும் உள்ளன.
கனகராஜ் 17.10.2020ல் சேலம் சூரமங்கலம் சார்பதிவாளராக பணிபுரிந்தபோது, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லஞ்சப்பணம் 2 லட்சத்து 43ஆயிரத்து 830 ரூபாய் கைப்பற்றப்பட்டு, சார்பதிவாளர் கனகராஜ் மீதும் அவர் உடந்தையாளர்கள் மீதும், U/S. 4/AC/2020, 102 of Cr.P.C., 7(a) & 7(A) of Prevention of Corruption (Amendment) Act 2018படி, சேலம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் குற்ற வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவருடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் அவரை கைது செய்வதிலிருந்தும், பத்திரப்பதிவுத்துறை அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் தப்பித்துக்கொண்டார். மேலும், சேலம் ரெட்டிப்பட்டி பகுதியைச் சார்ந்தவரும், கொங்குப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுக அம்மாசி என்பவர் மூலம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக பேரம் பேசியதில், அதற்கு லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் ஒத்துவராத நிலையில், அப்பாவி அம்மாசியை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரிடம் கைகாட்டிவிட்டு, அவர் நல்லவர் என்பதுபோல தப்பித்துக்கொண்டார்.
அவர்மீது லஞ்ச குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி, திருப்பூர் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். அங்கும் கனகராஜ் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கனகராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட (தணிக்கை) பதிவாளராக பொறுப்பேற்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு வீட்டுமனை மதிப்பு நிர்ணயம் செய்தாலும், ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அல்லது, பத்து பிரிவுகள் கொண்ட மனை பிரிவுக்கு ஒரு பிளாட்டு அவருக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட (நிர்வாகம்) பதிவாளராக இருந்த மணிவண்ணன், தூத்துக்குடிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதை அவருக்கு சாதமாகப் பயன்படுத்திகொண்ட கனகராஜ் மீண்டும், சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாக பதிவாளர் (பொறுப்பு) பதவியில் அமர்ந்து கொண்டார். நியாயப்படி இந்த பதவிக்கு, சேலம் மாவட்ட பத்திரப்பதிவாளர் (தணிக்கை) கவிதா மேற்கு மாவட்டத்திற்கும், கிழக்கு மாவட்டத்திற்கு கல்பனாவும் தான் பொறுப்பு பதவிகளுக்கு வந்திருக்கவேண்டும். இவர்கள் இருவரையும் ஓரம் கட்டி, மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து கனகராஜ் பதவிக்கு வந்துள்ளார்.
சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாக பதிவாளராக (பொறுப்பு) பதவிக்கு வருவதற்கு முன்பே அதாவது, கிருஷ்ணகிரியில் அதிகாரியாக இருந்தபோதே, சேலம் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலக பகுதியிலும் அவருக்கு நெருக்கமான புரோக்கர்கள் மூலம் வில்லங்க பத்திரங்களை பதிவு செய்ய வைத்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தப்பகுட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தப்பகுட்டை தங்கம் என்கின்ற தங்கராஜூ, இந்துமதி, கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன் ஆகியோர் மூலம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி குப்பாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, ஜெயமுருகா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை நடத்தி வந்தார். அதில், தப்பக்குட்டை தங்கத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக, தப்பக்குட்டை தங்கத்தை விலக்கிவிட்டார்.