சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலத்தில் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், ஜலகண்டாபுரம் அருகேயுள்ள பழகனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைத்தற்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று போராடி இழப்பீடு கிடைக்காத மன வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, , இன்று பவர்கிரிட் அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பெருமாளின் விவசாய நிலத்தில் காவல்துறையினர், வருவாய் துறையினர் உதவியுடன் அத்துமீறி நுழைந்து வேலை செய்ய வந்தனர். அப்போது, பெருமாள் குடும்பத்தினர், அவர்களைக் கண்டித்து வேலையைத் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். இதையடுத்து, பெருமாளின் மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெருமாளின் மகன்கள் மூன்று பேர் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்தனர். அதில், தங்களுக்கு முறையான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். அதன்பின், உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஜலகண்டபுரம் பகுதி அனைத்து ஊர் பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர்.