சேலத்தில் மறைந்த ஆடிட்டர் ரமேஷ் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில் , "காங்கிரஸ், திமுக கூறும் பொய் பரப்புரைகளை இஸ்லாமிய சகோதரர்கள் நம்ப வேண்டாம். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் ஒரு இஸ்லாமியர்கூட பாதிக்கப்படமாட்டார். தமிழ்நாட்டில் மதரீதியான மோதல்களை உருவாக்குவதற்கு திமுக, காங்கிரஸ் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1967ஆம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய தேர்தல் தந்திரங்களை இப்போதும் பயன்படுத்தி வருகிறார்கள். திமுக, பாஜக கூட்டணியாக இருந்தபோது ஆ.ராசா, டி.ஆர் பாலு ஆகியோர் நடுங்கி கொண்டுதான் இருந்தார்களா? யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவிற்கு கிடையாது. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதில் திமுக, காங்கிரஸ் கட்சியை தவிர வேறு கட்சிகள் கிடையாது.
தற்போது அரசியலில், தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரை திமுக நியமனம் செய்துள்ளது. ஆனால், திறமை மிக்க பிரசாந்த் கிஷோருக்கு தோல்வியையும் ருசித்துப் பார்க்க வேண்டிய காலம் இது. பிரசாந்த் கிஷோர் ஏறிச் செல்லும் வாகனம் நான்கு டயர் இல்லாதது. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு ஆனால் அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்தத் தருணம் சரியாக இருக்காது. 1996ஆம் ஆண்டு ரஜினிகாந்த் செய்த தவறு திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தது. ஆதரவு கொடுத்து முதலமைச்சராக ஒருவர் வருவதை நிரூபித்து காட்டியவர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் உள்ள 7ஆயிரம் திருக்கோயில்களை தொல்லியல்துறை நிர்வகிக்கும் என்ற கருத்திற்கு , எதிர்ப்பு தெரிவித்து வருகிறது திமுக.
திருக்கோயில்களை காப்பாற்றுவதாக இரட்டை வேஷம் போடும் கட்சி வேறெங்கும் கிடையாது. இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்ததும் திமுகதான். தற்போது அவர்களுக்காக போராடுகிறேன் என்று சொல்வதும் திமுகதான்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:திமுக அறிவாலயத்தில் ஜின்னாவின் ஆவி - பொன். ராதாகிருஷ்ணன்