சேலம் ஆயுதப்படையில் வாகன பிரிவு தலைமை ஓட்டுநராக சுந்தர் (46) என்ற காவலர் பணியாற்றிவந்தார். இந்நிலையில் சேலம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு நேற்று இரவு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுந்தர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகிலிருந்த காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் காவலர் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. சுந்தர் நேற்று (மே 20) காலையில் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் மீண்டும் மாலை பணிக்கு வந்துள்ளார். அப்போது இரவு 9 மணி அளவில் மீண்டும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது சேலம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் 320 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி