சேலம்:பெட்ரோல் திருடியதாகக் கூறி வடமாநில இளைஞர் ஒருவரை இன்று (டிச.20) அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட நபர்கள் கைகளை கயிறால் கட்டி தர்ம அடி கொடுத்த நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டபோதும், அவரை துன்புறுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அரியானூர் அடுத்த சின்ன சீரகாபாடி பகுதியில், பெட்ரோல் திருடியதாகக் கூறி வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அவர் வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்தார். அத்தகைய நிலையிலும் அங்கிருந்தவர்கள் அவருக்கு போதிய முதலுதவி என ஏதும் அளிக்காமல் இரக்கமின்றி பொதுமக்கள் அவரின் தலை முடியைப் பிடித்து தாக்கி, சித்ரவதை செய்த சம்பவம் மேலும் அதிருப்தியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு அளித்த தகவலுக்குப் பின் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் செல்ல காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் சேலம் புறநகர் பகுதிகளில் அடிக்கடி நிகழ்வதால் இத்தகைய பெட்ரோல் திருட்டுச் சம்பவங்கள், இனி அப்பகுதியில் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை வேண்டுமென அப்பகுதியினர் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.