சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த எம்.பெருமாபாளையம் கிராமப் பகுதியில், சேலம் - விருத்தாசலம் ரயில் மார்க்கம் செல்கிறது.
இந்தப் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தரக்கோரி கிராம மக்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுரங்கப்பாதை அல்லது ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தருவோம் என்று வாக்குறுதி அளித்துத் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மறந்துவிடுவதாக எம்.பெருமாபாளைய கிராம மக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று அந்த கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக அக்கிராம மக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின்போது பேட்டியளித்த எம்.பெருமாபாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் 450 குடியிருப்புகளில் 992 வாக்குகள் உள்ளன. ஒவ்வொரு முறை மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பொழுதும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எங்கள் கிராமம் தேடி வாக்கு சேகரிக்க வருவார்கள்.
அப்போது, கண்டிப்பாக எங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள்.