சேலம்: ஓமலூர் அருகே சேலம் விமான நிலையம் அமைந்து உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட மத்திய விமானத் துறை துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார். இதனை அடுத்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின்படி, வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக சேலம் விமான நிலையத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், ‘உதான்-5 திட்டத்தின் கீழ் இந்த மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு - சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. மறுபயணமாக கொச்சின் - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.
இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில், அக்டோபர் 29ஆம் தேதி முதல் பெங்களூரு - சேலம் - ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. மறு பயணமாக ஹைதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும். வாரத்தின் நான்கு நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும். திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவை நடைபெறும்.