சேலம்: சேலம் - சென்னை இடையிலான மத்திய அரசின் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், சேலத்தில் இருந்து சென்னைக்கு ஆறுவழிச்சாலை உறுதியாக அமைக்கப்படும், இதற்காக ரூ. 7500 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டே பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம், பாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில், பூலாவரி, பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் திரளானோர் பங்கேற்றனர்.
சேலம்-சென்னை ஆறுவழிச்சாலை திட்டம்; பொதுமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், "எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். அதற்கு எதிராக சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம். இந்தச் சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கில் ஆறுவழிச்சாலை திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போது, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததுகூட அவர்களிடம் இருந்து விவசாய நிலம் முழுவதையும் அபகரித்து கொள்வதற்காகவே என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.
மத்திய அரசும், மாநில அரசும் கைகோர்த்துக் கொண்டு விவசாயிகளை அழித்து இந்தச் சாலையை போடும் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம். எட்டு வழி சாலையாக இருந்தாலும் சரி, ஆறுவழிச்சாலையாக இருந்தாலும் சரி, எங்கள் நிலத்தை வழங்க மாட்டோம்" என்றனர். ஆறுவழிச்சாலை அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:'கள் இறக்குபவர்கள் குற்றவாளிகள் அல்ல; தடை விதிக்கும் அரசுதான் குற்றவாளி'