சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி மாயமானார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அதனடிப்படையில், காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் சேலம் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையில் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, கிருபாகரனின் நெருங்கிய நண்பர் சதிஷ்குமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கிருபாகரன் பாண்டிச்சேரியில் இருப்பதாக அவர் தகவல் அளித்தார். அதன்பின் வீடு திரும்பிய சதீஷ்குமார் காவல் நிலையம் சென்றதில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை குறித்து சதீஷ்குமாரின் பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.