மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக குறைப்பு - Mettur Dam
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 3000 கன அடியிலிருந்து ,1000 கனஅடியாக தற்போது குறைத்து வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அணையிலிருந்து நீர்திறப்பு குறைந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 94.83 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்ததால், நேற்று (நவ. 16) வினாடிக்கு 6,497 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 10392
கன அடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு இன்று (நவ. 17) காலை 10 மணி நிலவரப்படி 3,000 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 58346 டிஎம்சியாக உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணைப்பகுதியில் மழைப்பொழிவு 48.60 மி.மீ அளவு பதிவாகி உள்ளது.