சேலம்:பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவா - சினேகா தம்பதி. சினேகா சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சினேகாவிற்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக, நேற்று (நவ.24) ஜீவா கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தொப்பி அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு, கல்லூரியில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், தலையில் தொப்பி அணிந்து கொண்டு கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஜீவாவிற்க்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்த கல்லூரியின் சேர்மன் ராஜேந்திர பிரசாத்துடனும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரையும் கல்லூரியின் முதல் தளத்திற்கு அழைத்துச் சென்று தனியார் கல்லூரி சேர்மன் ராஜேந்திர பிரசாத் மற்றும் தினேஷ், பொறுப்பாளர் ஜெயகாந்த் ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் கல்லூரிக்கு சென்ற காவலர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஜீவாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கல்லூரியின் சேர்மன் ராஜேந்திர பிரசாத், ஜெயகாந்த், தினேஷ் ஆகிய மூன்று நபர்கள் மீதும் சட்டவிரோதமாக தாக்குதல், அடைத்து வைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈரோடு: திமுகவினர் தாக்கியதாக பாஜக நிர்வாகி புகார்