சேலம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக சேலம் மாநகரில் அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து பல மணி நேரம் கடுமையாக பாதித்தது.
சேலம் அம்மாபேட்டையை அடுத்த குமரகிரி ஏரிப் பகுதியில் கொட்டிய கனமழையால் ஏரி முழுவதும் நிரம்பி, அதன் நீர் பச்சப்பட்டி நாராயணன் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் செய்வதறியாது திகைத்து வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதிகளில் சென்று தஞ்சம் அடைந்தனர்.
கனமழை வெள்ளத்தில் பரிதவிக்கும் கைத்தறி நெசவாளர்கள்! இதையடுத்து தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர்கள் இரவு நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மழை நீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் அடைப்புகளை நீக்கி ஓரளவுக்கு வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்தனர்.
ஆனால் இன்று மாலை வரையிலும் ஆறுமுகம் நகர் பகுதியில் உள்ள நீர் வடியவில்லை. இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள கைத்தறி கூடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முழுவதும் சேதமாகி உள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மழை நீர் செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாற்றப்பட்டதால் குமரகிரி ஏரியின் உபரிநீர் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வை மாநகராட்சியால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்க: கனமழையால் ஏற்காடு ஓடையில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!