சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) குமாரபாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆனால் அவரது உடலை நேற்று (செப்டம்பர் 1) மாலை வரை, சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அப்புறப்படுத்தாமல், அப்படியே படுக்கையிலேயே வைத்திருந்ததால், அந்த அறையில் சிகிச்சைப் பெற்று வந்த சக நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் நோயாளிகள் புகார் தெரிவித்தும், தாமதமாக இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டு மற்றும் கழிப்பறையில் சுகாதார சீர்கேடு நிறைந்து இருப்பதாகவும், கிருமி நாசினி மருந்து முறையாக தெளிக்கப்படுவதில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.