சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு சேலம்: பெண்ணின் மூச்சுக்குழலில் சிக்கிய உலோகத்தை, அரை மணி நேரத்தில் அகற்றி சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நுரையீரல் பகுதி மூச்சு குழாயில் சுமார் 4 சென்டிமீட்டர் அளவில் உள்ள உலோகம் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கிய அந்தப் பெண்ணிற்கு, டிராக்கியாஸ்டமி (tracheostomy tube) என்னும் உலோக கருவி மூச்சுக் குழலில் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது.
ஆண்டிற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய அந்த கருவியை மாற்றாததால், அது துருப்பிடித்து அதன் ஒரு சிறு பகுதி உடைந்து மூச்சு குழாயில் சென்று அடைத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், காது மூக்கு தொண்டை பிரிவின் துறை தலைவர் கிருஷ்ண சுந்தரி தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக செயல்பட்டு, அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அரை மணி நேர அறுவை சிகிச்சை செய்து அந்த உடைந்த உலோகத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அந்தப் பெண் நலமாக உள்ளார். ஓர் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இதைபோன்ற பாதிப்புகளால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த உலோகத்திலான பொருள் உடைந்ததே, அப்பெண்ணுக்குப் பாதிப்பு ஏற்பட்டதற்கான முக்கிய காரணம். இதனை கவனக்குறைவால் விட்டு இருந்தால், அந்த உலோகம் நுரையீரலோடு ஒட்டி விடும். அதன் பின் அதை அகற்றுவது மிக கடினமான ஒன்றாக ஆகிவிடும். அது உயிருக்கே ஆபத்தான ஒன்றாக அமைந்திருக்கும். துரிதமாகச் சிகிச்சை மேற்கொண்டதால் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு மாற்றுக் கருவி வைக்கப்பட்டுள்ளது. இது மற்றொரு உலோகத்தால் ஆன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அது எளிதில் உடையக்கூடியது அல்ல. மேலும் இதனை அடிக்கடி மாற்றக்கூடிய நிலைமையும் ஏற்படாது. மேலும் அவருக்கான சிகிச்சை அனைத்தும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் இதுபோன்று பொருட்கள் ஏதேனும் உடலுக்குள் சிக்கிப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், எவ்வித தயக்கமும் இன்றி காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்தால், அவற்றை முறையாகப் பரிசோதனை செய்து அதனை அகற்றி உதவிடத் தயாராக இருப்பதாகவும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் படுகாயம்… சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மக்கள் கோரிக்கை!