சேலம்:நாமக்கல் பகுதியில் தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 42க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுமி ஒருவர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா உணவு விற்பனை செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சோதனையில் கிலோ கணக்கில் அசைவ உணவுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, சேலத்திலுள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சேலத்திலுள்ள பிரபல அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், சுமார் 165 கிலோ எடையுள்ள சுகாதாரமற்ற ஷவர்மா மற்றும் கோழி, ஆட்டிறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகரச்சிக்கு உட்பட்ட சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம் அழகாபுரம், பேர்லாண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி கதிரவன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையிலான குழுவினர் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா மற்றும் கோழி, ஆட்டிறைச்சி என சுமார் 200 கிலோ எடையிலான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர் .