சேலம்: சென்னையிலிருந்து சேலத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளின் வாழ்வாதாரமான விளைநிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்முதல் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்காக விவசாயிகள் பலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுக ஆட்சி அமைந்ததும் எட்டு வழிச்சாலைத்திட்டம், அதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.