தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டு வழிச்சாலையை அமைக்கக்கூடாது என விவசாயிகள் போராட்டம்! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் : எட்டு வழிச்சாலையை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி, சேலத்தில் விவசாயிகள் நேற்று (ஜூன் 9) 5ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 சேலத்தில் விவசாயிகள் 5வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் விவசாயிகள் 5வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jun 10, 2020, 5:36 PM IST

எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இதற்கு ஆதரவாக தமிழ்நாடு அமைச்சர்கள் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதனைக் கண்டித்து, சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில், கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களில் நின்று, காவல் துறையினர் அனுமதியின்றி, கைகளில் கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஐந்தாவது நாளான நேற்று (ஜூன் 9), சேலம் எருமபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், கையில் கால்நடைகளைப் பிடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கால்நடைகள் ஆடு, மாடுகளை கையில் பிடித்தபடி, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, 'எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் எருமபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ' மத்திய அரசு நகர் திட்ட இயக்குநர் மூலம் எட்டு வழிச்சாலை திட்டங்களைத் தொடங்க மேல்முறையீடு செய்தது.

இது எங்களைப்போன்ற விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாடு அமைச்சர்கள் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என்று கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவோம். தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறது. இந்தத் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம்' என்று கூறினார்.

ஏற்கெனவே போராட்டம் நடத்திய 32 விவசாயிகள் மீது சேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details