திமுக கவுன்சிலரின் கணவர் வீடு புகுந்து தாக்கியதாக பரவும் வீடியோ சேலம்: இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரும், இவரது உறவினர் இளங்கோவன் என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரமேஷ் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதற்காக தோண்டப்பட்ட மண்ணை இளங்கோவன் வீட்டு அருகில் ரமேஷ் கொட்டியுள்ளார்.
இதனால் இளங்கோ, ரமேஷிடம் சில நாட்களுக்கு முன் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ரமேஷ் மீண்டும், இளங்கோவின் வீடு அருகிலேயே மண்ணை கொட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளங்கோ, இடங்கணசாலை நகராட்சி திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து குமார் மற்றும் அவரின் நண்பர் அன்பு ஆகியோர் ரமேஷின் வீடு புகுந்து, குமார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ரமேஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் துறையினர், குமார், இளங்கோ மற்றும் அன்பு ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிகரெட் கடன் தர மறுத்ததால் கோபம்.. கடை உரிமையாளரின் கண்ணை நோண்டிய கொடூரம்!