சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). இவர் கட்டடக் தொழிலாளி. இவர் அவ்வப்போது கட்டிடங்களுக்கு தேவையான சிமெண்ட் மூட்டைகளை வாங்கி சப்ளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், போலியாக சிமெண்ட் தயார் செய்து இதனை பிரபல தனியார் நிறுவனத்தின் சிமெண்ட் பைகளில் அடைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த நிறுவனத்தின் சேலம் தொழில்நுட்ப மேலாளர் சஞ்சய்குமார் இந்த மோசடியில் ஈடுபட்ட முருகன் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில், கருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் அங்கப்பன் ஆகியோருடன் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், கட்டட தொழிலாளி முருகன் தனியார் நிறுவனத்தின் பெயரில் சிமெண்ட் மூட்டைகளை விற்று வருவதும் இந்த சிமெண்ட் மூட்டைகள் போலி என்றும் தெரியவந்தது.