நாடு முழுவதும் கரோனோ வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்காத வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிலையில் கர்ப்பிணிகள் தங்களை எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும், எந்தெந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து கொள்ளலாம், வீண் அலைச்சல்களை தவிர்க்கலாம் என்பது குறித்து சேலம் மகப்பேறு மருத்துவர் அனுஷா பல்வேறு அவசியமான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.
இது தொடர்பாக சேலத்தில் இன்று மகப்பேறு மருத்துவர் அனுஷா செய்தியாளர்களிடம் பேசுகையில்," கரோனோ வைரஸ் நோய் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது . இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் அவசியம். இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் தங்களது உடல் நலன் குறித்தும், வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் குறித்தும் கூடுதலான அக்கறை எடுத்துக் கொள்வதும் அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதும் நல்லது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கின்ற இந்த நேரத்தில் கர்ப்பம் அடைந்தது குறித்த சோதனையை பெண்கள் மருத்துவமனைக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளும் கருவிகள் உள்ளன. அவற்றை வாங்கி வீட்டிலேயே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் சென்று உடல் நலன், கரு வளர்ச்சி குறித்து சோதனை செய்து கொள்வது அவசியம்.
மகப்பேறு மருத்துவர் அனுஷா ஆலோசனை அடிக்கடி வயிற்றுவலி, உதிரப்போக்கு இருந்தால் மட்டுமே கர்ப்பிணிகள் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் கரோனோ தொற்று எளிதில் பரவக்கூடியது என்பதால் சாலையில் வரும் பொழுதும் அல்லது மருத்துவமனையில் காத்திருக்கும் பொழுது பரவும் ஆபத்து உள்ளது. எனவே கடுமையான வெயில் வெப்பம் மிகுந்த இந்த நாள்களில் தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கர்ப்பிணிகள் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும். தேவையான ஆலோசனைகளை பெற தொலைபேசி எண்கள் மூலம் மருத்துவர்களை அவ்வப்பொழுது தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள், தாய்ப்பாலை தவிர வேறு உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தாய்மார்கள் ஊட்டச்சத்துள்ள உணவை தவறாமல் உண்பதும் அதிக நீர் பருகுவதும் அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். அதனால் தேவையான அளவுக்கு பால்சுரக்கும் என்பதால் ஊட்டச் சத்தான உணவை பச்சிளம் தாய்மார்கள் உண்ண வேண்டும் என்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:துப்பாக்கிச் சூடு நடுவில் கர்ப்பிணியை மீட்ட பாதுகாப்புப் படையினர்!