சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை குரங்குகள் தூக்கிச்சென்று சேதப்படுத்திவருவதாகப் புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், மூன்று நபர்கள் சீலிங் வொர்க் (மேற்கூரை அமைக்கும் பணி) செய்வதற்காக வந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜன. 01) மாலை 5 மணி அளவில் அங்கு வந்த மூன்று குரங்குகள் ஜன்னல் வழியே பாடல் கேட்டுக்கொண்டு சீலிங் பணி மேற்கொண்டிருந்த விக்னேஷ் என்பவரின் செல்போனை தூக்கிச் சென்றது. அதனைக் கண்ட மூன்று பணியாளர்களும் குரங்கைத் துரத்திச் சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5 மாடிகளிலும் ஓடியும் அவர்களால் செல்போனை குரங்குகளிடமிருந்து மீட்க முடியவில்லை. அப்போது, குரங்கு செல்போனை கீழே விடாமல் ஒற்றைக் கையில் பிடித்தவாறு ஓடியது. சிறிது தூரம் சென்ற குரங்கு செல்போனை வாயால் கவ்வி மனிதர்போல காதில் வைத்தது. இளைஞர்கள் துரத்துவதைக் கண்ட குரங்கு மீண்டும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கியது.