சேலம்: தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருடன் துணை ஆட்சியர் கீதாபிரியா, முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, கோட்டாட்சியர் மாறன், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதுகுறித்துப் பேசிய சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வக்குமார், " சேலம் மாவட்டத்தில் நேற்றுவரை 10,474 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று(பிப்.3) வருவாய்த் துறை, காவல்துறையினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில் 1,684 பேருக்கும், காவல்துறையில் 1,384 பேருக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 5 அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்கள், 20 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்களிடம் சிறிது பயம் உள்ளது. தற்போது, அரசு அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள்" என்றார்.
இதையும் படிங்க:பட்டயக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்