சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசு தலைமை பொது மருத்துவமனை நோயாளிகளின் வசதிக்காகவும், நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காகவும் பேட்டரி மூலம் இயங்கும் இரண்டு வாகனங்களை மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேட்டரி வாகனங்களை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கூறியதாவது, "சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் யார் வந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
நோயாளிகளுக்கான சிறப்பு வாகனம் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் கரோனா குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரோனா தொற்று குறித்து சேலம் மாவட்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தொற்றை மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
வெளிமாவட்ட, வெளிமாநிலங்களிலிருந்து சேலம் மாவட்ட எல்லைக்குள் வருவோர், முழுமையாக கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் சேலம் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இ-பாஸ் இல்லாமல் வரும் நபர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவில் காட்டும் அலட்சியம் வெட்டுக்கிளியிலும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்