சேலம்:சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அக்.19 முதல் அக்.24 வரையிலான நாட்களில், ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதிக்கப்படுகிறது என ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் "லியோ" திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்.19 முதல் அக்.24 வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அக்.19 முதல் அக்.24 வரை ஒரு நாளில் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 1.30 மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையரங்குகளில் திரையிடக்கூடாது. மேலும், திரைப்படத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.