சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அமைந்துள்ள வலசகல்பட்டி ஏரியின் தடுப்புச்சுவர் உடைந்து விடும் அபாயம் உள்ளதாக வந்த செய்தியை அடுத்து அம்மாவட்ட ஆட்சியர் வலகசகல்பட்டி ஏரியை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது, சுமார் 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வலசகல்பட்டி ஏரிக்கு, அருகில் இருக்கும் பச்சமலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் வழிந்து ஓடி வருவது வழக்கம்.
கடந்த இரண்டு மாதங்களாக பச்சமலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரியானது தனது முழு கொள்ளவான 62.69மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. தற்போது, ஏரி நிரம்பி அதன் உபரி நீர் வழிந்தோடியின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீரானது ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுவேதா நதியில் கலக்கின்றது.
பருவமழை வலுப்பெற்றுள்ள காரணத்தால் பச்சமலைப்பகுதியில் கனமழை பெய்து ஏரியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே , ஏரியைச்சுற்றியுள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறுது.