தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திப்பட்டி கிராமம் எங்கே? சூரியூரையும் காலியாக்கும் முயற்சியில் சேலம் மாவட்ட நிர்வாகம்! - திமுக எம்.பி. ஆய்வு - Member of Parliament s r parthipan

சேலம் : மூன்று தலைமுறையாக வனத்தையொட்டி உள்ள பகுதியில் வசிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் குடும்பங்களை வெளியேற்றிட சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வனத் துறையினர் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் பெண்கள் கூறினார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம்  மலைவாழ் குடும்பங்கள்
நாடாளுமன்ற உறுப்பினரிடம் மலைவாழ் குடும்பங்கள்

By

Published : Jan 27, 2020, 1:43 PM IST

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் ஊராட்சிக்குள்பட்ட ஜல்லுத்துமலை அடிவார பகுதியான சூரியூர் என்ற பகுதியில் மூன்று தலைமுறையாக மலைவாழ் மக்கள், பல்வேறு இனத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.

இந்த நிலையில் வனத் துறைக்குச் சொந்தமான பகுதியில் வசித்துவருவதாகக் கூறி இன்றைக்குள் (ஜனவரி 27) அனைவரும் இடத்தை காலி செய்யுமாறு வனத்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது குறித்து மனு அளித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் குமார் உள்ளிட்டவர்கள் வந்து வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

அப்போது அங்கு வசிக்கும் மக்கள், "நாங்கள் வசிக்கும் பகுதியானது வனத் துறைக்குச் சொந்தாமனது அல்ல; வருவாய்த் துறைக்குச் சொந்தமானது. இது குறித்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்துவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அதிமுக அரசு வெளியேற்றியதன் காரணமாக எங்களது வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றோம். தற்போது மற்றவர்களையும் வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்று கூறினார்கள்.

மலைவாழ் குடும்பங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்

மேலும் அவர்கள், "இங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றிட வனத் துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். இதற்காக மாலை நேரங்களில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வரும் பெண்களைத் தனியாக அழைத்து மிரட்டுவது, அவர்கள் குளிக்கும்போது புகைப்படம், காணொலி எடுப்பது, மேலும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருவதாகக் கூறியும், ஆண்களை சாராயம் காய்ச்சுவதாகக் கூறியும் பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறோம்" எனக் கண்ணீர் மல்க நாடாளுமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், இது தொடர்பாக வனத் துறை அலுவலர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுமாறும் இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிவுறுத்தினார்.

இது குறித்து எஸ்.ஆர். பார்த்திபன் கூறும்போது, ஜல்லுத்துப்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள அத்திப்பட்டி, சூரியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், அத்திப்பட்டி என்ற கிராமமே காணாமல்போனதாகவும், தற்போது இதில் உள்ள சூரியூர் மக்களையும் வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்திட அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியாக தெரிவித்தார். இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பியும், கால்நடைகளை நம்பியும் வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவருவதால் இதனைக் காப்பாற்றிட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க:'நாம் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவில்தான் இந்த தேசத்தின் புகழ் உயரும்; பிரிவில் அல்ல!'

ABOUT THE AUTHOR

...view details