சேலம்:மாங்கனி மாநகரமான சேலம் 157 ஆண்டுகளை கடந்து இன்று (நவ. 01) 158வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை குறித்து இந்த சிறப்பு செய்தித் தொகுப்பில் பார்ப்போம்..
நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பகுதியை சைலம் என்று அழைப்பர். அதுவே காலப்போக்கில் சேலம் என மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சேலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம் தான், எனவே இதனை மாங்கனி மாநகரம் என்றும் அழைப்பது உண்டு. மேலும் இரும்பு உருக்கு ஆலை உள்ளதால் இதற்கு ஸ்டீல் சிட்டி என்று மற்றொரு பெயரும் உள்ளது.
1792ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம் மாவட்டம், ஆரம்பத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்த பகுதியாக இருந்தது. பின்னர் 1866ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி சேலம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலத்தின் சிறப்புகள் :1937ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலத்தில் தான். கெட்டி முதலி அரசர்களால் உருவாக்கப்பட்ட தாரமங்களம் கைலாசநாதர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், குழந்தை இயேசு பேராலயம், திப்பு சுல்தான் கட்டிய ஜாமீய பள்ளிவாசல் உள்ளிட்டவை சேலத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.