சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வசித்த மணியம்மாள் என்ற பெண் கொலைசெய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் சங்கர் (42) என்பவரை ஏத்தாப்பூர் காவல் துறையினர் கடந்த 18ஆம் தேதி கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இவரை சிறையில் அடைப்பதற்கு முன் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுத்து பரிசோதித்ததில், இவர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவரை விசாரித்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சங்கர், பேருந்தில் ஏறி பெத்தநாயக்கன்பாளையத்திலுள்ள இவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். காவல் துறையினர் இவரைத் தேடியதை அறிந்த சங்கர், வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இவரை உடனடியாகக் கைதுசெய்து சிகிச்சைக்காக மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்தனர். இதற்கிடையில், ஏத்தாப்பூர் பேரூராட்சியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை உறுதியானது.
அருகருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த இருவருக்கு, அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதியானது.
இப்பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க இரு பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளான ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஐந்து நாள்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் சில நாள்களுக்கு மேலும் முழு ஊரடங்கு அந்தப் பகுதியில் நீட்டிப்பதற்கு வாய்ப்ப்புள்ளது என்று, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தினசரி சந்தை, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. எவ்வித முன்னறிவிப்புமின்றி ஞாயிற்றுக்கிழமை திடீரென முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.