கன்னியாகுமரியிலிருந்து ஓமலூர் வழியாக ராஜஸ்தான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்தும், பெங்களூருவிலிருந்து ஓமலூர் வழியாக கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தும் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 6 நேபாள நாட்டினர் உயிரிழந்தனர். மேலும், 24 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சூழலில் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். விபத்தில் காயமடைந்தவர்களின் விவரங்களையும் காயத்தின் தன்மைகளையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, விபத்தில் காயமடைந்துள்ள அனைவருக்கும் சிறப்பான சிகிச்சையினை அளித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ”முதலமைச்சர் இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிறப்பான சிகிச்சை அளித்திடவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்து கொடுத்திட வேண்டுமெனவும் உத்தரவிட்டார். அதன்படி, காயமுற்றவர்களுக்குச் சிறப்பான சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.