2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நேற்று(மார்ச்.10) தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். மேலும், நேற்று முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையொட்டி சேலத்தில் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை 15 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர். இதில் எட்டு லட்சத்து 320 ஆண்களும், ஏழு லட்சத்து 92 ஆயிரத்து 90 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 77 பேரும் அடங்குவர்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், நகர்ப்பகுதியில் 161 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை, அதேபோல் புறநகர்ப் பகுதியில் 81 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.
தேர்தல் அமைதியாக நடைபெற பதற்றமான பகுதிகளில் துணை ராணுவமும் பயன்படுத்தப்படும். பொது இடங்களில் அரசியல் கட்சி தொடர்பான பேனர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது .