சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்," தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிடவும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.
அவ்வாறு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை சேலம் மாவட்டத்தில் முழுமையாக நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் பணியாற்றி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒன்றியத்தில் கடந்த 2016 - 17 ஆம் ஆண்டு முதல் 2019 - 20 ஆம் ஆண்டு வரை கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81.28 கோடி மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 982 வளர்ச்சித் திட்டப் பணிகள், அடிப்படை வசதி மேம்பாட்டுப்பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை பல்வேறு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.62.20 கோடி மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 357 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் ரூ.19.08 கோடி மதிப்பீட்டில் 625 பணிகள் நடைபெற்று வருகின்றன.