தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு பணிகள்: சேலம் ஆட்சியர் ஆய்வு! - சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம்: கரோனா தொற்று தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அலுவலர்களுடன் ஆய்வு
அலுவலர்களுடன் ஆய்வு

By

Published : Aug 28, 2020, 1:39 PM IST

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்த்தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது,

"தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆத்தூர் நகராட்சியைப் பொறுத்தமட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தீநுண்மி நோய் தாக்கம் அதிகம் ஏற்பட்டுள்ளதாகப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கிக்கின்றன.

மேலும், ஆத்தூர் அருகில் உள்ள நரசிங்கபுரம் நகராட்சி, இதர பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் இந்நோய்த் தடுப்புப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுருத்தப்பட்டுள்ளது.

ஆத்தூரில் இதுவரை 1,800 நபர்களுக்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, இதுவரை 1,344 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 36 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தனர்.

இன்றைய தினம் வரை 420 நபர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை, பெத்தநாயக்கன்பாளையம் கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவற்றில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

ஆத்தூர் நகராட்சியில் ஆக. 25இல் மட்டும் 99 நபர்கள் கரோனா தீநுண்மி தொற்று ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டு அவர்களில் 33 நபர்கள் மருத்துவமனைகளிலும், மீதமுள்ள 66 நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென அவரவர்களின் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் அவரவர்களின் வீடுகளிலேயே (41 வீடுகளில்) தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினர் நாள்தோறும் நேரில் சென்று அந்நபர்களைப் பரிசோதித்து உரிய சிகிச்சைகள் அளிப்பதோடு, தொலைபேசியிலும் அவர்களின் உடல்நலம் குறித்து தொடர்ந்து கேட்டறியப்பட்டு வருகின்றது.

ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டறியப்படும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களைத் தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக ஏற்கனவே ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 70 படுக்கைகள் கொண்ட கரோனா நல மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

மேலும், கூடுதலாக 500 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா ஆற்றுப்படுத்துதல் மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதில் தற்போது ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 200 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா ஆற்றுப்படுத்துதல் மையம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் இந்நோய்த் தடுப்புப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் தொலைபேசி எண். 0427-2450022, 0427-2450023, 0427-2450498, கைப்பேசி எண். 91541-55297, 95009-70108, 95009-75108 என்ற எண்களில் தொடர்புகொண்டு கோவிட் 19 சளித்தடவல் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திட பொதுமக்களின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானது.

இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவுருத்துகின்ற அனைத்து நோய்த் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக ஏற்று அவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தவிர்த்து அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் எம். துரை, இணை இயக்குநர் (நலப் பணிகள்) டாக்டர். மலர்விழி வள்ளல், ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. செல்வக்குமார், ஆத்தூர் நகராட்சி ஆணையர் என். ஸ்ரீதேவி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் ஆர். சேகர், ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details