சேலம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு செடிகளில் மாவு பூச்சியின் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தோட்டக்கலை, மலைபயிர்கள் துறை இயக்குநர் மருத்துவர் என்.சுப்பையன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் ஆகியோர் எடப்பாடி வட்டம் வெள்ளரிவெள்ளி ஊராட்சி, சித்தூர் ஊராட்சி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்விற்கு பின்னர் தோட்டக்கலை, மலைபயிர்கள் துறை இயக்குநர் மருத்துவர் சுப்பையன் தெரிவித்ததாவது:
"தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண், தோட்டக்கலை பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தி, மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்கு பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு செடிகளில் மாவு பூச்சியின் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு எடப்பாடி வட்டம் வெள்ளரிவெள்ளி ஊராட்சி, சித்தூர் ஊராட்சி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்தோம்.
சேலம் மாவட்டத்தில் சுமார் பத்தாயிரம் எக்டேர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் மாவு பூச்சியின் தாக்குதல் ஆரம்ப நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்கவும், பூச்சியின் தாக்குதல் மீண்டும் வராமல் இருக்கவும் விஞ்ஞானிகள் சார்பில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மரவள்ளி கிழங்கின் விதை கரணைகளை பூச்சி நோய் தாக்காத வகையில் நல்ல விதை கரணைகளை தேர்வு செய்ய வேண்டும். விதை கரணைகளை நடும்முன் விதை நேர்த்தி செய்து நடவேண்டும். விதை கரணைகளை கார்பன்டசிம் 1 கிராம், டைமெத்தோவேட் 2 மிலி (அ) மோனோகுரோட்டப்பாஸ் 2 மிலி என்ற மருந்துகளை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் (இந்த விகிதத்தில் கரணைகளின் அளவுக்கு எற்ப மருந்துகளை தயார் செய்ய வேண்டும்) 15-லிருந்து 30 நிமிடம் வரை வைத்திருந்து பின் நடவு செய்தால், விதை கரணைகளில் உள்ள நோய்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.