சேலம் : சீரமைப்புப் பணிகள் நிறைவுபெறுவதை அடுத்து சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் வரும் சனிக்கிழமை முதல் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதி அளித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதை அடுத்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறும் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "ஏற்காடு பிரதான மலைப்பாதை சாலையில் உள்ள இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டது. அது தற்காலிகமாக மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நிலச்சரிவை நிரந்தரமாக சரி செய்யும் வகையில் அரசு ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவு 17 மீட்டர் உயரமும் 30 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
இதனை நிரந்தரமாக சீரமைக்க கான்கிரீட் கலவை கொண்டு 22 படிகள் அமைத்து நிலச்சரிவு மீண்டும் ஏற்படாத வண்ணம் சீரமைக்கப்படுகிறது. பத்து நாட்களில் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த வாரத்தில் இரண்டு முறை கன மழை பெய்ததால் பணிகள் தாமதமாகி உள்ளன.
அடுத்த ஏழு நாளில் சீரமைப்புப் பணிகள் நிறைவடையும். இதற்கிடையில் வரும் சனிக்கிழமை(மே.6) முதல் இருசக்கர வாகனம், கார் போன்ற இலகு ரக வாகனங்கள் இந்த வழியே ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அடுத்த வாரம் புதன்கிழமை(மே.10) பணி முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான வியாழக்கிழமை(மே.11) முதல் முழு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது.
ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மலைப்பாதையில் வாகனம் இயக்குவதில் முன் அனுபவம் இல்லாத ஓட்டுநர்களைக் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டாம். விபத்து ஏற்பட முழுக் காரணம் பிரேக் பெயிலியர் என்று தெரிய வந்துள்ளது. அதனால் குப்பனூர் சாலை வழியாக வரும் வாகனங்கள், போக்குவரத்து அலுவலர்களால் முழு சோதனை செய்யப்பட்டு ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். குப்பனூர் - ஏற்காடு மலைப் பாதையில், கடந்த மூன்று நாட்களில் மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து உள்ளன. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம் - ஏற்காடு பிரதானச் சாலை போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படாத காரணத்தால் சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அந்தச் சாலை ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகி விபத்து ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் ஏற்காடு வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க :ஆ.ராசா - தங்கமணி திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?