சேலம்: சங்ககிரி அடுத்த தேவண்ணகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கமலஹாசன் - ராதிகா குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். அதற்காக உரிய வரியும் கடந்த 47 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அந்த குடும்பம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் அவர்கள் வீட்டின் அருகே உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த ராஜரத்தினம், ஆனந்தராஜ் , பச்சையம்மாள் உள்ளிட்ட சிலர் ராதிகாவின் குடும்பத்தினரை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு கடந்த சில ஆண்டுகளாக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள், ராதிகா வீட்டிற்குச் சென்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர், குழந்தைகள் உணவு அருந்திக்கொண்டிருந்த போது உணவில் மலத்தை வீசியும், ராதிகா மற்றும் அவரது பாட்டி சுருட்டையம்மாள் இருவரையும் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பட்டியல் சமூக மக்கள் நியாயம் கேட்டபோது, அவர்கள் வீட்டின் அருகே இருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்தும் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.