கரோனோ வைரஸ் நோய்த் தொற்று பொதுமக்களிடையே பரவாமல் இருப்பதற்காக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த 8,600 தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவின் பேரில் வட அவர்கள் அனைவருக்கும் உடனடியாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் அடுத்த ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள வடமாநில கட்டடத் தொழிலாளர் முகாமில் நேற்று அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், 50க்கும் மேற்பட்ட ஒடிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை நேரடியாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்டத்தில் எந்த ஒரு தொழிலாளரும் உணவின்றி இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. ஒடிசா, பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள், சேலம் மாவட்டத்தில் 8,600 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்கள் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார்
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!