சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனாபட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவரும் உறவினரான ராஜாவும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மீனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீனா 2017ஆம் ஆண்டு திருப்பூர் பெருமாநல்லூர் கோயிலில் ராஜாவை திருமணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் திருப்பூரில் இருவரும் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மீனாவுக்கு உடல்நிலை பாதித்திருந்ததை அறிந்த மீனாவின் பெற்றோர் திருப்பூருக்குச் சென்றனர்.
திரும்பி வரும்போது குழந்தையை நைனாபட்டிக்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர். இங்கு வந்ததும் குழந்தையை ரூ. 3 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மீனா தனது குழந்தை எங்கே என பெற்றோரிடம் கேட்டதற்கு குழந்தை இறந்துவிட்டது என அவர்கள் கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மீனா-ராஜா தம்பதியினர், தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை பெற்றோர் 3 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டதாக புகார் செய்தனர். அந்தப் புகாரின்மீது விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்துவந்தனர்.
விற்கப்பட்ட குழந்தை ஒரே நாளில் மீட்பு போலீசார் மீனாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது குழந்தையை பெற்றபோது மீனாவிற்கு உடல்நிலை மோசமாகி மனநிலை பாதிக்கப்பட்டவர்போல நடந்துகொண்டார். இதனால் குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்த குழந்தையில்லாத உறவுப் பெண் ஒருவருக்கு கொடுத்துவிட்டோம் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து திருநாவலூர் சென்ற தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டுக்கொண்டு செவ்வாய் இரவு சேலம் திரும்பினர். புகார் கொடுத்த ஒரே நாளில் ஆண் குழந்தையை மீட்டுவந்த ஆட்டையாம்பட்டி போலீசாரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் கணிகர் பாராட்டினார்.
இதையும் படிங்க:
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!