சேலம் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக நீர் நிலைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றும் அளவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கன்னங்குறிச்சி, பொம்மிடி, டேனிஷ்பேட்டை, முத்துநாயகன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிப் பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த போடிநாயக்கன்பட்டி ஏரியில் தற்போது கழிவுநீர், அதன் மீது ஆகாயத் தாமரையும் படர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீராகும் போடிநாயக்கன்பட்டி ஏரி 35 ஆண்டுகளாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்த ஏரி மிகுந்த சேதமடைந்துள்ளது. முதலில் குறைந்த அளவில் காணப்பட்ட ஆகாயத் தாமரை தற்போது ஏரியை முழுவதுமாக சூழ்ந்து மாசுபடுத்தியுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆண்டிப்பட்டி, பழைய சூரமங்கலம், போடிநாயக்கன்பட்டி, புதுரோடு ஓடை வழியாக சென்று சேலத்தாம்பட்டி ஏரியை சென்றடைகிறது. இங்குள்ள மக்கள் இந்நீரை விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
போடிநாயக்கன்பட்டி ஏரியில் பரவியிருக்கும் ஆகாயத் தாமரை இந்த ஏரிப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது, தாங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தினால் அரசு தங்களுக்கு இந்த புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசாங்கமும் கவலைகொண்டதாக தெரியவில்லை. சென்ற ஆண்டு பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு செய்ததில் இந்த ஏரியும் அடங்கும். இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நினைத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏரிக்கரைகளில் வெறும் கண்துடைப்புக்கு மட்டும் செடி கொடிகளை அகற்றிவிட்டு ஆகாயத் தாமரைகளை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து உரிய இடங்களில் முறையான கோரிக்கை வைத்தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை, என வேதனை தெரிவிக்கின்றனர், இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் இளம்பரிதி கூறுகையில், "இந்த ஏரி குறித்து எங்கள் தந்தை மிகவும் பெருமையாகக் கூறுவார். ஏரி எங்கும் நிறைந்திருக்கும் நீர் கடல்போல் காட்சியளிக்கும். ஆனால் தற்போது இந்த ஏரி இருக்கும் நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துவருகிறது. ஆகாயத் தாமரை நீக்கப்படவில்லை. ஏரியின் பரப்பளவும் குறைந்துள்ளது. இங்கிருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை எதிர்த்து போராட்டம் செய்து இடித்த பின்னரே, இதற்கு ஒரு விடிவு காலம் ஏற்பட்டது. தற்போதுள்ள நெருக்கடி இந்த ஏரிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசுடன் சேர்ந்து மக்களும், அப்பகுதியில் நற்பணி செய்துவரும் இளைஞர்களும் முன்வந்து உதவ தயாராக உள்ளோம். ரத்த தானம், சமூகப் பணி போன்ற பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் இதிலும் தங்கள் பங்களிப்பை கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என தெரிவித்தனர்.
கழிவுநீராகும் போடிநாயக்கன்பட்டி ஏரி பல ஆண்டுகால போராட்டம், நீர் நிலைகளை பாதுகாப்பது என்பது அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு சமம். இதனை கருத்தில்கொண்டு அரசு செயல்பட வேண்டும், மேலும் இப்பகுதி ஏரியை பாதுகாக்கும் வண்ணம் வேலியமைத்து தர வேண்டும், மக்கள் நம்பிக்கையை, அவர்களின் நீராதரத்தை பாதுகாக்க அரசு உதவ வேண்டும். இதுவே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.