சேலம் மாவட்டம் காக்கா பாளையத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மோகன்ராஜ்(40). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாகப் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினர் மோகன்ராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேலும் பல பெண்கள் மோகன்ராஜால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பல்வேறு புகார்கள் எழுந்தன. இவை அனைத்தையும் விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி, காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையை அமைத்தார். இதையடுத்து சேலம் நீதிமன்றத்தின் அனுமதியோடு மோகன்ராஜை ஏழு நாட்கள் காவலில் எடுத்து தனிப்படையினர் விசாரணை செய்தனர்.
மோகன்ராஜ் நண்பன் மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர் இந்த விசாரணையில் மோகன்ராஜ் மறைத்து வைத்திருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்ஃபோனில் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை இருந்துள்ளன. இதில் மோகன்ராஜால் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடியோவும் அடக்கம். தொடர்ந்து விசாரணை நடத்திய காவல் துறையினர் மோகன்ராஜுக்கு உடந்தையாகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனையும் நேற்று கைது செய்தனர். இவரிடம் இருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. மோகன்ராஜை காவலில் வைத்து விசாரிக்கும் நாள் இன்றுடன் முடிவடைந்ததால், சேலம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் செந்தில் குமார், மோகன்ராஜை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நேற்று கைது செய்யப்பட்ட மோகன்ராஜின் நண்பர் மணிகண்டனும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதையடுத்து, மணிகண்டனும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.