சேலம்: சேலம் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு ஏ.ஆர்.ஆர்.எஸ் சில்க்ஸ் என்ற பிரபல தனியார் ஜவுளிக்கடை நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. அது மட்டுமின்றி சேலம் அருகே உள்ள வலசையூரில் ஏ.ஆர்.ஆர்.எஸ் அகாடமி என்ற கல்வி நிறுவனமும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரனின் மகன் கார்த்திக் பாலாஜி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் சுபராகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுபராகாவின் கணவர் கார்த்திக் பாலாஜி மற்றும் அவரது மாமியார் ஆகிய இருவரும், தங்களுக்குக் கடன் சுமை அதிகம் இருப்பதாகவும், அதை அடைக்க உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பணம் வாங்கி வர வேண்டும் என்றும் கூறி சுபராகாவை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பணத்தை வாங்கி வரா விட்டால் தன்னுடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் கார்த்திக் பாலாஜி மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மருமகள் சுபராகா தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுது புலம்பி உள்ளார்.
பணம் கொடுக்க மறுத்து வீட்டிலிருந்த அவருக்கு, கணவரும் மாமியாரும் தொல்லைகள் கொடுத்து, பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது .இதனை அடுத்து கார்த்திக் பாலாஜியின் மனைவி சுபராகா தனது சொந்த ஊரான திருச்சூருக்குச் சென்றுள்ளார் .இதனிடையே கார்த்திக் பாலாஜி தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரம், சுபராகா தரப்பில் கேரள நீதிமன்றத்தில் தனது கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வழக்கு விசாரணை முடியும் வரை தனது கணவர் வீட்டில் தான் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.