கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக சரிதா என்ற பெண் இருந்துவருகிறார். பாலசுப்பிரமணியம் என்பவர் சரிதா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாதி ரீதியாக இழிவுபடுத்தி அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரைச் சாதி ரீதியாக இழிவுபடுத்திய பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், "பெண் பஞ்சாயத்து தலைவரை இழிவுபடுத்திய பாலசுப்பிரமணியம் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
அவரை சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், சேலத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க:”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்