சேலம் டவுன் திருவள்ளுவர் சிலை அருகே சேலம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. துணை இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அலுவலகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், பண்ணை குட்டை அமைப்பதில் மோசடி நடந்திருப்பதாகவும் புகார்கள் வந்தது.
இதனையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் தலைவாசல் பகுதிகளில் பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் மண் கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை பணிகள் நிறைவேற்றப்பட்டதாக பயனாளிகள் பட்டியல் தயாரித்து 2 கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஓய்வுபெற்ற துணை இயக்குனர்களான நாழிக்கல்பட்டி சேர்ந்த சுப்பிரமணியன், சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, சேலம் சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கோவையைச் சேர்ந்த சுப்புரத்தினம் மற்றும் விரிவாக்க அலுவலர் மேட்டூர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் உண்மை ஆவணமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி பணம் கையாடல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஓய்வுபெற்ற ஐந்து வேளாண் துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:காவல்துறையினர் வாகனத்தை எரித்த பொதுமக்கள்!