சேலம்:புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அகிலேஷ் செல்வ மாளிகை நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் கடை ஊழியருடன் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொழிலுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார்.
பின்னர் இந்த தொகையை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் பகுதியில் உள்ள தனது 7 ஏக்கர் நிலத்தை சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பூபதி என்பவருக்கு விற்று உள்ளார்.
ஆனால் இதற்குரிய பணத்தை ரவுடி பூபதி தராமல் இழுத்தடித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த பணத்தை நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் பலமுறை கேட்டு வந்தார். இதில் கோபமடைந்த பிரபல ரவுடி பூபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏகாம்பரத்தின் நகை கடைக்கு வந்து அவரை மிரட்டி அவர் வைத்திருந்த நில பத்திரங்கள் சிலவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது.
அடுத்தடுத்து இந்த சம்பவங்களால் நகைக்கடை அதிபர் ஏகாம்பரத்திற்கும், பிரபல ரவுடி பூபதிக்கும் தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரபல ரவுடி பூபதியும், அவரது நெருங்கிய நண்பர் பிரவீன்குமார் என்பவரும் கோரிமேடு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கடத்திச் சென்றனர். அதையடுத்து சேலம் 5 ரோடு பகுதி அருகே கார் சென்றபோது பிரவீன்குமார் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். பின்னர் மருத்துவமனையில் சேர்ந்த பிரவீன்குமார் இது குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.