சேலம்:சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே வீரபாண்டியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் வழக்கம்போல் வேலையை முடித்து, நேற்று மாலை அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில், இன்று (ஏப்.20) காலை பணியாளர்கள் வந்து பார்த்தபோது அலுவலகத்தின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் பீரோக்களில் இருந்த நோட்டுப் புத்தகங்கள், பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் சார்பதிவாளர் மணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் வைக்கும் பெட்டி, அலுவலக வளாகத்தில் தூக்கி வீசப்பட்டு இருப்பதும், பணப்பெட்டியை உடைக்க முடியாததால் திருடன் வெளியில் வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:''உன்னத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்''.. வேலூரில் கோடை மழை
மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. குறிப்பாக, மோப்பநாய் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வீரபாண்டி நோக்கி சென்று விட்டு, மீண்டும் அலுவலகம் நோக்கி ஓடிவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில், முகமுடி அணிந்த நபர் ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பூட்டை உடைக்கும் காட்சிப் பதிவாகியுள்ளது. அந்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணப்பெட்டியில் பணம் எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் முக்கியமான ஆவணங்கள் எவையேனும் திருடு போனதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பேண்டேட் கட்டுக்குள் மறைத்து வைத்து 1.12 கிலோ தங்கம் கடத்தல் - பயணி ஒருவர் கைது!